தந்தி
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த சகல குற்றங்களையும் எல்லோரும் மன்னிப்பார்களாக
----
எனக்கு இந்த காலையிலேயே ஸ்ரீதர் ஏன் என் வீட்டிற்கு வந்து "தந்தி குடுக்க போகணும் வரையா ?" என்று கூப்பிடுகிறான் என்று நான் ஆச்சர்ய பட்டேன்.
"ஏன் என்னடா ஆச்சு ?"
ராஜராம ஐயர் சென்னையில் இருந்தார். அவரின் வயதான தாயாரும் அவரின் சகோதரியும் திருவிடைமருதூரில் தனியே இருந்தார்கள். இவர்களுக்கு care taker ஆக அருகில் இருந்த ஒரு சிலரும் குறிப்பாக குலபதி ஐயர் மற்றும் வாஞ்சிசார் அவர்களும் அப்போது இருந்தனர்.
குலபதி ஐயரிடம் தன்னுடைய சில முக்கிய தஸ்தாவேஜுகளை குடுத்து வைத்திருந்ததோடு ஒரு சில பணபரிமற்றங்களும் செய்து வந்தார். திருவிடைமருதூர் வந்தவுடன் குலபதி ஐயரை உடனே தேட ஆரம்பித்து விடுவார். ஒரு சில நேரங்களில் ஆலோசனைகளும் கேட்பார்.
இதனால் குலபதி ஐயர் வீட்டில் உருளை கிழங்கு பொடிமாஸ் செய்தால் கூட
" பாரு ராஜ ராம ஐயர் காசு .." என்று வரது சேகர் போன்றவர்கள் கமென்ட் கொடுத்தார்கள்..
ராஜ ராம ஐயர் இரண்டு அல்லது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறையாவது தனது பிளைமூத் காரில் வந்து இறங்குவார். அவர் எதற்கு வருகிறாரோ இல்லையோ தன் வீட்டுகொல்லையில் உள்ள தோட்டத்தில் இருக்கும் மா, பலா, வாழை, தென்னைமரங்களை பார்க்கவாவது வருவார்.
"வாஞ்சி உனக்கு ஒன்னு தெரியுமோ.. இந்த பலா நான் இந்தோனேசியா போனபோது கொண்டு வந்தது. என்ன டேஸ்டா இருக்கும் தெரியுமா ..? ஒவ்வொரு சுளையும் உள்ளங்கை பெருசுக்கு இருக்கும். போனவருஷம் இத நம்ம கவர்னர்பட்வாரிக்கு கொடுத்து அனுப்பினேன் . மனிஷன் அசந்து போயிட்டார்னா பாத்துக்கோயேன் .."
அதில் விளையும் பாதி பழங்களுக்குமேல் ஸ்ரீதர், நாகு வரது போன்றவர்களே சாப்பிட்டார்கள் என்பது ஒரு கொசுறு செய்தி.
ராஜராம ஐயர் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் கிட்ட தட்ட மேனஜிங் டைரக்டர் அளவுக்கு பதவியில் இருந்தார். முக்கிய புள்ளிகள் பலரையும் தெரியும்.மேலும் திருவிடைமருதூரில் பலருக்கும் அவர் சென்னையிலும் மற்றும் பல ஊர்களிலும் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். எனவே திருவிடைமருதூர்காரர்களுக்கு அந்த நாளில் அவர் ஒரு முக்கிய புள்ளி.
எங்களை ஒரு முறை அவரின் பளைமூத் காரில் ஒரு ரவுண்டு அழைத்து போவதாக கூறினார். அதற்கு ஆசை பட்டு காரை ஸ்டார்ட் செய்ய பல முறை தள்ளி விட்டிருக்கிறோம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
"ஏன் யாருக்கு என்ன ஆச்சு ?" என்றேன்
"லட்சுமி பாட்டிக்கு உடம்பு சீரியஸா இருக்கா, ராஜராம ஐயருக்கு தந்தி கொடுத்து வர சொல்லணும் " என்றான்.
ராஜ ராம ஐயரின் தாயார் லட்சுமி பாட்டி இரவிலிருந்து படுத்த படுக்கையாக இருப்பதாகவும் பேச்சு மூச்சே காணும் என்றும் சாப்பாடு கொடுக்க போன குலபதி ஐயரின் மனைவி கூற ..
உடனே குலபதி அய்யர் எதிரில் வந்த வாஞ்சிசாரினை அணுகி
"வாஞ்சி... பாட்டிக்கு உடம்பு சரியில்ல..................
நீ சித்த வந்து நாடி பிடிச்சி பாரேன் " என்று குலபதி ஐயர் ஸ்கூல் லுக்கு சென்று கொண்டிருந்த வாஞ்சி சாரிடம் கூற.........
வாஞ்சி சாரும் ஒரு தேர்ந்த மருத்துவர் போல் உள்ளே போய் "பாட்டி ராத்திரி என்ன சாப்டா ..?" என்று கேட்டுக்கொண்டே நாடி பிடித்து பார்த்தார்.
பின்னர் உதட்டை பிதுக்கி கொண்டே (தலையையும் அசைத்துக்கொண்டு ) வெளியே வந்த வாஞ்சிசார் குலபதி ஐயரை பார்த்து
"ஒய் கிழவி மத்யானம் கூட தாண்டாது மாறி இருக்கு"
தகவல் சொல்லிடுங்கோ ராஜா ராமனுக்கு " என்று குலபதி ஐயரிடம் கூறிவிட்டு வேப்பத்தூர்(பள்ளிக்கு) நோக்கி சென்று விட்டார் .
உடனே அங்கே ஒரே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அங்கு அருகிலிருந்த ஸ்ரீதரிடம் குலபதி ஐயர்
"ஸ்ரீதர் .. ராஜாராமன் அட்ரஸ் தரேன் காசும் தரேன் போஸ்ட் ஆபிஸ் போய் தந்தி கொடுத்துட்டு வரையா ?"
"என்ன மேட்டர் கொடுக்கணும் மாமா ?"
"Mother serious start immediately அப்படின்னு கொடு "
காசை வாங்கி கொண்டான், என்னை சைக்கிளை ஓட்ட சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்தான்.
"ராம்ஜி இந்த ஊர் போஸ்ட் ஆபிசுல கொடுத்தா லேட்டா போய் சேரும் .
அதுனால நேரா திருபுவனம் போவோம் அந்த போஸ்ட் ஆபீஸ் நேரடியாக கும்பகோணத்துக்கும் கனக்ஷன் சீக்கிரம் போய்டும் " என்றான்.
ஸ்ரீதரின் கப்போர்ட் அப்போதே கட்ட பட்டு விட்டது.
திருபுவனம் போய் சேர்ந்தோம்
ஸ்ரீதர் தந்தி பாரம் வாங்கி எழுத போனவனுக்கு திடீர் என்று ஒரு விசித்ரமான ஞானோதயம் பிறந்தது.
"ஏண்டா வாஞ்சி சித்தப்பா இன்னம் ஒரு மணி நேரத்துல போய்டும் அப்படிங்கறார்.எதுக்கு சீரியஸ் அப்படின்னு ஒருவாட்டியும் அப்புறம் போன பிறகு expired அப்படின்னு இன்னொரு வாட்டியும் கொடுக்கணும் ..? அதுக்கும் நாமதான் வரணும் பேசாம ஒரேடியா Mother expired start immediately அப்படின்னு கொடுத்தா என்ன ?என்றான்
அவன் கூறியது அநியாயமாக பட்டாலும் இன்னொரு முறை யார் லோ லோ என்று சைக்கிளை மிதித்துக்கொண்டு வருவது என்று நானும் "அப்படியே போடு " என்று ஆசி வழங்கினேன்.
மதியம் சுமார் மூணு மணி அளவில் மீண்டும் ஒன்று கூடினோம்.
"ஏன்டா பாட்டி எப்படி இருக்கா ஆயிடுத்தா இல்லையா ?" என்றேன்
"ரெண்டு மணி வரையிலும் ஒன்னும் தெரியல்ல சுவாசம் இழுத்துண்டு இருக்கு கற் கற் ருன்னு சப்தம் வரது பூனை கத்தராமதிரி " என்றான் வரது.
"அப்படின்னா ...???" என்றேன்
"அப்படின்னா அப்படிதான் இன்னம் கொஞ்ச நேரம்தான் தங்கும் "
"நல்லா பாத்தையா குறட்டையா இருக்கா போறது " என்றேன்
"குறட்டைக்கும் இதுக்கும் எனக்கு வித்யாசம் தெரியாதா..? " என்று என்மேல் கோபப்பட்டான் வரது.
"நீ சொல்ற இந்த பூனை சப்தம் எங்க பெரியப்பாக்கு கூட தினம் கேக்கறது ஆனா ஒன்னும் ஆகலையே ?" என்று ஆதங்கப்பட்டான் சேகர்.
"ஆமாம் நீ ஏன் இப்படி பேய் அறைஞ்சா மாதிரி இருக்க " என்றேன்
"இல்ல வாஞ்சி சார் சொன்னாரேன்னு அடுத்து ஆகவேண்டியது கார்யம் எல்லாத்தையும் பண்ணிட்டேன் " என்றான்.
"என்ன பண்ணின ?" என்றேன்
"சாமி டி க்கு காசு கொடு " என்று கருப்பாக எதிர் வீட்டு வாசலில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு இருந்தவன் கேட்டான்.
"இது யாருடா ?"
"சப்தம் போடாத அவன்தான் வெட்டியான். அவன நாலுமணிக்கு மேல பிடிக்க முடியாது சாராய கடைக்கி போய்டுவான்
அதுனால கால்ரூவா அட்வான்ஸ் கொடுத்து இங்கேயே அழைசிண்டு வந்துட்டேன் ..
அவன் எங்கயும் போகாம அப்படியே புடிச்சு வெச்சுண்டு இருக்கேன் இப்ப வரட்டிக்கும் விறகுக்கும் காசு கேக்கறான் " என்றான் வரது
எனக்கு தூக்கி வாரி போட்டது.
அதற்குள் அங்கு சைக்கிளில் வந்த அவன் தம்பி நாகு வரதுவை பார்த்து
"வரது நீ சொன்ன படியே பச்சை மட்ட, மூங்கில் பாலூர் ஸாஷுலாதுல வெட்டியாச்சு கல்யாணபுரம் போய் சட்டியும் வாங்கிண்டு வந்துட்டேன்"
அப்பறம் என்ன பண்ணணும் சொல்லு " என்றான் மூச்சிரைக்க
"ஏன்டா பாவிங்களா அங்க இன்னம் பாட்டிஇழுத்துண்டுதான் இருக்கா நீங்க அதுக்குள்ள ஏற்பாடு பண்ணிட்டிங்களாடா.. இன்னும் என்னதான் பாக்கி " என்றேன்
"பாட்டி மட்டும்தான் பாக்கி .." என்றான் வரது.
"ராம்ஜி நீ விவரம் தெரியாம பேசாத .." என்று ஸ்ரீதர் தொடர்ந்தான்
" ராஜராம ஐயர் உடம்பு சரியில்லாதவர் யுரினால் ப்ராப்ளம் உள்ளவர் இடுப்புல சுரகுடுக்கை மாதிரி யூரின ஒரு பையில போட்டு அத அவரோட தோளுல மாட்டிண்டு இருக்கர். அவரால ரொம்ப நேரம் ஈரத்தோட நிக்கல்லாம் முடியாது அவர் வந்தா உடனே எடுத்துடனும் . அவர் வர எப்படியும் அஞ்சு மணி ஆய்டும் ஆறுமனிக்குள்ள அஸ்தமனத்துக்கு முன்னாடி கரை சேத்தாகனும்
இல்ல வெட்டியான் தண்ணி போட போய்டுவான் .. நாளைக்கி சனிக்கிழமை வேற .. பாட்டி தனியா போகமாட்டா தெருவுல இன்னம் ரெண்டு பேர சேத்துண்டும் போய்டுவா ஆமா ..
எவ்ளவோ இருக்கு உனக்கு என்ன தெரியும் ..:" என்று ஸ்ரீதர் பிரவாகமாக கொட்டினான்
" சாமி......... காசு .." என்று கால் மணிக்கு ஒருமுறை வெட்டியான் வேறு கூவிக்கொண்டே இருந்தான்.
குலபதி ஐயருக்கும் வாஞ்சி சாருக்கும் இந்த ஏற்பாடுகள் தூக்கி வாரி போட்டன. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ,
சுமார் ஐந்து மணிக்குகெல்லாம் சர்......... என்று ராஜா ராம ஐயர் கார் வந்தது.
" ஏண்டா வாஞ்சி எத்தன மணிக்கு ஆச்சு ? எனக்கு மெட்ராஸ் லேந்து இங்க வர eight hours Forty Minutes ஆச்சு அந்த forty minutes கூட நடுவுல சாப்பிட நிறுத்தினதுனால இல்லேன்னா இன்னம் சீக்கிரம் வந்திருப்பேன் "
எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ராஜா ராம ஐயர் முன்னே செல்ல அவர் பின்னல் வாஞ்சிசார் ,குலபதி ஐயர் எல்லோரும் துண்டால் முகத்தை மூடியவாறு போக ....
"அம்மா போய்டயா................." என்றபடி கட்டிலில் உள்ள தனது தாயாரை ராஜா ராம ஐயர் அழுதுகொண்டே சற்று கிட்டே சென்று பார்க்க
அப்போது நார்மடி துணியால் முகத்தை மூடியிருந்த லட்சுமிபாட்டி அதை சற்று விலக்கிக்கொண்டு ஈன குரலில் " ராஜாராமா வந்துட்டையாடா............. நேக்கு தள்ளல்லடா....... மூணு நாளா முண்ணூறு டிகிரி ஜுரம் அடிக்கரதுடா
வேப்பத்தூர் வைத்யரத்னமும் வந்தார் மருந்து
குடுத்தர்...............
ஏன் காலம்பர வாஞ்சியும் தான் வந்து பாத்துட்டு போனான் .............
யார் என்ன பார்த்தா என்ன மகாலிங்கசாமிதான் என்ன பாக்கமாட்டேன்கிறான் அவன்தான் என்ன அழச்சிண்டு போகணும்
சரி வா............. ரொம்ப துரம் வந்து களச்சு போயிருப்பே..............
காப்பி போட்டு தறேன் இரு
அடி சாவித்திரி............. சத்த குமுட்டிய இடுத்து குடு ராஜாராமனுக்கு காப்பி போடறேன்" - ன்னு சொல்லிக்கொண்டே லட்சுமி பாட்டி மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்த்தாள்
எல்லோரும் ஆளாளுக்கு ஒரு திக்காக ஓட குலபதி ஐயரும் வாஞ்சி சாரும் நடந்ததற்காக வருத்தம் தெரிவித்தார்கள்.
பின்னர் எப்போதும் போல் ஸ்ரீதர் ருக்கும் வரதுக்கும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடந்தது.குலபதி ஐயர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.இதனால் பின்னல் ஒருநாள் குலபதி ஐயரை பழி வாங்க போவதாக சபதம் போட்டான்.
இந்த தந்தி கொடுப்பது அத்துடன் நிற்க வில்லை எப்போதெல்லாம் ஸ்ரீதருக்கு பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் போய் கொடுத்துவிட்டு வந்தான். இப்படி இரண்டு முறை வந்ததால் ராஜா ராம ஐயர் கடிதம் எழுதி விட்டார்.
'ஸ்ரீமான் குலபதி
யாரோ அயோக்கிய பயலுகள் எனக்கு அடிக்கடி தந்தி
கொடுக்கறாங்க, அவர்களை கண்டிக்கவும்... போலீசில் பிடித்து கொடுப்பதாக கூறவும் .... அப்புறம் கொல்லையில் பலா அடிக்கடி திருட்டு போகிறது பார்த்துக்கொள்ளவும் . ஒகையானை விட்டு பெரிக்க சொல்லவும் " என்று இன்லேன்ட் லெட்டரில் கடிதம் போட்டார்.
ஒருநாள் நிஜமாகவே அந்த பாட்டி சீரியஸ் ஆக போய் விட
ஸ்ரீதர் முதல் ஆளாய் போய் தந்தி கொடுத்தான்.
இந்த முறை "இப்பயும் mother expired அப்படின்னு கொடுத்தா அவர் வரமாட்டார் நம்பமாட்டார் அதனால .."
"வேற என்ன கொடுக்க போற ?"
ஸ்ரீதர் எழுதினான்
"குலபதி ஐயர் சீரியஸ் ஸ்டார்ட் இம்மீடியட்லி "
ராஜராம ஐயர் விரைந்து வந்தார்.
இந்த முறை Forty minutes முன்னதாக.
அன்புடன்
ராம்ஜி
9790778943
Comments
Post a Comment