சைக்கிள் கற்றுக்கொள்ள ஆசை
மகாதான தெருவில் ஒரு சில பெண்களும் சைக்கிள் விட ஆரம்பித்ததனால், குறிப்பாக ஏட்டு ரமணி அய்யர் வீட்டு ராஜி, பக்கத்து வீட்டு பாமா ஆகியோரும் சைக்கிள் விட்டதனாலும் சைக்கிள் கற்றுக்கொள்ளும் ஆசை மேலோங்கியது. மேலும் விஜி இரண்டே நிமிடத்தில் கடைதெருவிற்குபோய் சுப்புணி கடையில் பொடி வாங்கி வந்த சாதனையை இது வரை முறியடிக்க வில்லை என்று அறிகிறேன். மேட்டூர் வீட்டு ரவி புது சைக்கிள் வைத்திருந்தான். நாம் தொட்டு விட்டால் உடனேயே துணியால் துடைப்பான். BSA ல் கருப்பும் Ralley ல் பச்சையும் உசத்தி என்பான். அவனும் அதை தான் வைத்திருந்தான்.
நமக்கு சைக்கிள் கற்றுதறுவதற்கு ஜானகிராமன் தான் லாயக்கு அவனிடமே கேட்கலாம் என்று இருந்தேன்.
PSR ன் PT கிளாஸ் ல் Pullups ல் இருவருமே தொங்குவோமே தவிர ஒருமுறை கூட எடுத்தது கிடையாது. மேலும் உடல் வலிமையில் இருவருமே ஒரே இனம் தான்.
ஜானகிராமன் என்னை விட மூன்று வயது பெரியவன். ஒன்பதாம் வகுப்பிலேயே மூன்று வருடம் படித்தால் காங்கேசன் சார் அவனை வகுப்பின் மற்றொரு Chair, Table, Black board அகவே கருதினார்.
கோரை முடி, இரட்டை மண்டை, ஒல்லியான தேகம் , முன்னே நீட்டிருக்கும் இரண்டு பற்கள்.
காக்கி கலர் துணி பை பித்தளை தூக்கில் எப்போதும் மோர் சாதம் வடுமாங்கை.
புத்தகபையில் ஒரு பழைய Readers Digest எப்போதும் இருக்கும். அவன் எப்போது படிப்பான் என்று தெரியாது. ஆனால் மூன்று வருடங்களாக அவன் இங்கிலீஷ் ல் தான் fail ஆனான் என்று கேள்விபட்டேன்.
" சைக்கிள் கத்துக்கணும் அப்படினையே இன்னைக்கி ஆரம்பிக்கலாமா ?"என்றான்
பா மகாலிங்க தேசிகரின் கிளாஸ் ல் தமிழ் புத்தகத்தை முகத்தை மறைத்தபடி.
எனக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் என்றால் இதனை கற்றுக்கொள்ள அவனுக்காக நான் நிறையவே செலவு செய்திருக்கிறேன்.
நடராஜ் பென்சில் , இந்தியா மேப் , 13 சொட்டு பிரில் இங்க், VR என்று பிளேடு ஆல் செதுக்கப்பட்ட மர scale. வாசனை ரப்பர் - அதனை கடித்தே காலி செய்து விட்டன். மற்றும் பல.
மாலை சந்திரகாசு மணி அடித்தவுடன் இருவரும் சைக்கிள் இருந்த வேப்பமர நிழலுக்கு சென்றோம்.
ஜானகிராமன் வேப்பமரத்தடியில் எனக்கு ஒரு உபதேசம் செய்தான்.
" சைக்கிள் ஓட்ட கத்துக்கறதுக்கு முன்னாடி சைக்கிளை எப்படி தள்றதுன்னு கத்துக்கோ "
என்று கூறி அவனுடைய பஞ்சரான சைக்கி ளை என்னிடம் கொடுத்து தள்ள சொன்னான். அவன் புத்தக மூட்டையை கேரியரிலும் என்னுடையதை ஹேன்ட் பாரிலும் மாட்டினான் .
ஹேன்ட் பார் பாரம் தாங்காமல் ஒரு பக்க மாக இழுக்க அதற்காக தலையில் ஒரு குட்டு வாங்கினேன். இப்படியே வடக்கு வீதி யூனுஸ் கடை வரையில் தள்ளி போனேன்.
யூனுஸ் கடை போனதும், காசு இருக்கா என்று கேட்டான். இல்லை என்று தலையை ஆட்டினேன். மீண்டும் ஒரு உபதேசம் செய்தான் ஜானகிராமன்.
" கையில எப்பயும் 25 காசு வச்சிக்கோ அப்பதான் பஞ்சர் ஆனாலோ, காத்து இறங்கினலோ உதவும் " என்றான்
ஆமாம் நீயேன் வைத்துக்கொள்ள வில்லை என்று கேட்டதற்கு என்னை முறைத்தான்.
பின்னாளில் அதுவே 50 ரூபாய் ஆனது two wheeler ஓட்டும்போது.
பஞ்சர் ஒட்டியவுடன் " இப்பதான் பஞ்சர் ஒட்டிருக்கு டபிள்ஸ் போகக்கூடாது " என்று கூறி வேகமாக ஓட்டி சென்று விட்டான்.
எனக்கு கோபமாகவும் துக்கமாகவும் இருந்தது.
பின்னர் மில் ஜெயராம் நாய்டு அவர்களின் மாட்டு வண்டியை பார்த்தும் என் புஸ்தக மூட்டையை அதில் தூக்கி போட்டுவிட்டு அதன் பின்னால் வீடுவரை தொங்கி சென்றேன்.
பின்னர் ஒரு ஞாயிற்று கிழமை யூனுஸ் கடைக்கு சென்று வாடகைக்கு சைக்கிள் கேட்டேன்.
" உன்ன எனக்கு தெரியாது யாரையாவது சொல்ல சொல்லு " என்றான்.
" யூனுஸ் பாய் நம்ம பையன்தான் கொடுங்க " என்றான் ஜானகிராமன்
" ஏலே உன்னையே எனக்கு தெரியாது நீ என்ன அவனுக்கு ரெகமண்டேஷன் " என்று அவனை திட்டினான்.
மிகுந்த முயற்சிக்கு பிறகு " காசு இருக்கா?" என்று யூனுஸ் கேட்டான்.
" ஆ ஆ 30 காசு இருக்கு இரண்டு மணிநேரம் வேணும் " என்றேன் சட்டை பையை இடது கையால் கட்டியாக பிடித்துக்கொண்டு .
" சரியா ரெண்டு மணி நேரத்துல வந்துடனும் " என்று கண்டிஷன் போட்டு கொடுத்தான்.
யூனுஸ் தலை மறையும் வரை தள்ளி சென்று விட்டு திருமஞ்சன வீதி திரும்பியதும் ஜானகிராமன் ஓட்ட நான் அவன் பின்னாலேயே ஓடினேன் .
School ல் முக்கால் வாசி நேரம் அவனே ஓட்டினான் . " டேய் டேய் கொடுடா" என்று அவன் பின்னாலேயே மூச்சிரைக்க ஓடினேன் . அரைமணிக்கொருமுறை மணி பார்த்து வார சொன்னான். பிள்ளை டீ கடை சென்று ஓடி ஓடி பார்த்து வந்தேன்.
கடைசியாக ஒருவாறு என்னிடம் சைக்கிள் கொடுத்து ஓட்ட சொன்னான். ஏகத்துக்கு முதுகில் குத்தினான். " வளையாத, குனியாத " என்று சொல்லி சொல்லி அடித்தான். மாமியார் கொடுமையாக இருந்தது. கேட்டால் அவன் அம்பியிடம் அடிவாங்கியதை சொன்னான்.
ஒரு நேரத்தில் கையை விட்டுவிட்டான் . நான் நேரே போய் ஆலமரத்தில் மோதி கீழே விழ முழங்காலில் ஒரு ரூபாய் அளவிற்கு சிராய்ப்பு ஏற்பட்டது.
"எச்சில் தொட்டு வெச்சிக்கோ " என்றான் பின்னர் அவனே ஒரு பேப்பரை எடுத்து அதன் மேல் ஒட்டிவிட்டான். இதெல்லாம் சகஜம் என்று கூறி , இன்னொரு காலிலும் அடிவிழுந்தால் தான் பஞ்சாயத்து போர்டு ல் லைசென்ஸ் தருவார்கள் என்று என்னிடம் கதை விட்டான்.
இந்த களே பரத்தில் மணி போனதே தெரியவில்லை. அழுதேன் . ஜானகிராமன் சைக்கிள் front wheel லை கால்களுக்கு இடையில் வைத்து handle bar ஐ இப்படியும் அப்படியும் வளைத்தான். யூனுஸ் செவுளில் அறிவான் என்று என்னை பயமுறுத்தினான் .
"காசு இருக்கா ?" என்றான்
தொட்டு பார்த்தேன்
காணவில்லை ...!!!!
மீண்டும் அழ ஆரம்பித்தேன். ஆனால் ஜானகிராமனோ " அய்யயோ கொய்யாக்கா
அடுப்புல போட்டா நெல்லிக்கா .."" என்று பாடிக்கொண்டே கையை உதறிக்கொண்டு மெதுவாக பின்னாலேயே நடந்து,சற்றே வேகம் பிடித்து , பின்னர் ஒரே திரும்பாக திரும்பி ஓட்டம் பிடித்தான். பின்னர் அங்கு போய் சைக்கிள் விட்டுக்கொன்றிருந்த மற்ற பையன்களின் சைக்கிளை விட ஆரம்பித்தான்.
நான் புறங்கையால் கண்ணை துடைத்தபடியே காசை தேட ஆரம்பித்தேன்.
அங்கு வந்த சுந்தரம் சார் " என்னடா பண்ற " என்றார். அவரை பார்த்தவுடன் ஜானகிராமன் ஓடிவந்து அவரிடம் நடந்ததை சொன்னான்.
" எவ்வளவு காசு ?" என்றார்.
"50 காசு " என்றான் ஜானகிராமன் நான் பதில் சொல்வதற்குள்.
தன் ஜிப்பா பையிலிருந்து 50 காசு கொடுத்து அவருடைய style ல் திட்டி அனுப்பினார்.
" ஆமா ஏன்டா 30 காசுக்கு பதிலா 50 காசு கேட்ட? என்றேன்,
"பின்ன மூணு மணிநேரம் ஆயிடிச்சி தெரியுமில்ல காசுக்கு எங்க போறது, அதான் கேக்கறதுதான் கேக்கறோம் 50 பைசாவா கேக்கலாமே என்று கேட்டேன் " என்றான் .
இவனை புதிசாலி இல்லை என்று யார் சொல்வது?
யூனுஸ் கடையில் சைக்கிள் விடும்போது யூனுஸ் கண்டுபிடித்துவிட்டான். சைக்கிள் கிழே விழுந்து வளைந்திருப்பத்தையும் ,ஸ்போக்ஸ் உடைந்து இருப்பதையும். அடிக்க ஓடிவந்தான் . நான் நொண்டி நொண்டி ஓடி போய் விட்டேன். ஜானகிராமனுக்கு பொளிச் பொளிச் என்று இரண்டு அறை விழுவதை பார்த்தேன். அப்பாட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் ஜானகிராமன் என் அருகில் வந்து " "வா வா உன் அப்பா கிட்டக்க சொல்றேன் "என்றான்.
வேண்டாம் என்று கெஞ்சினேன் . அதற்காக சர்பத் வாங்கி தரசொன்னான் .என்னிடம் இருக்கும் 50 காசு அவன் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது.
இருவரும் சாப்பிட்டோம். நான் அப்போதுதான் ஆரம்பித்தேன் அதற்குள் அவன் குடித்து விட்டு "நல்லாவே இல்லை எங்க குடு பாக்கலாம் " என்று கூறி என்னுடைய அனுமதி இல்லாமலேயே என் சர்பத்தை ஒரே மடக்கில் குடித்தான்.
எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க கிளாஸ் டம்பளரின் உள்ளே எட்டி பார்த்தேன். ஒன்றும் இல்லை. ஏமாற்றத்துடன் வீடு போய் சேர்ந்தேன்.
பின்னர் வாலிப பருவத்தில் பெண்களை பார்த்தவுடன் பார்க்காதது போல் கையை விட்டு விட்டு ஓட்டுவது , சைக்கிளை பெடல் பண்ணாமல் ஓடி போய் ஏறுவது என்பதை வேப்பதுரில் இருந்து வந்த சில நண்பர்களை பார்த்து கற்றுக்கொண்டேன்.
அது வேறு கதை.
நீண்ட வருடங்களுக்கு ஜானகிராமன் மந்தைவெளி ல் இருப்பதாக அறிந்தேன்.
அவனை தேடி மந்தைவெளி ன் சந்துகளில் போனேன். சிறுவர்கள் விளையாடிகொண்டிருந்தார்கள்'. அவர்களில் ஒருவனை கேட்டேன். அவர்கள் வேறு ஒரு பையனை கை காட்டினார்கள்.
அவன் நொண்டி நொண்டி என் அருகில் வந்து " என்ன ?" என்றான்.
கேட்டேன்.
கூட்டிபோனான் .
" உன் காலில் என்ன ?' என்றேன் அடிபட்டுவிட்டதாக கூறினான். முழங்காலில் பேப்பர் ஒட்டி இருந்தது.
மானசீகமாக இரண்டு கைகளை முன்னால் நீட்டி கார் ஒட்டி போனான்.
" அம்மா , அப்பாவை தேடி யாரோ வந்திருக்கா" என்றான்
" உட்கார சொல்லு இப்போ வந்து விடுவா " என்று ஒரு பெண் குரல் கேட்டது. ஹால் ல் பார்ப்பவர் இல்லாமல் டிவி ல் சீரியல் ஓடிகொண்டிருந்தது. ஜானகிராமன் போடோவில் சிரித்துக்கொண்டிருந்தான்.
எனக்கு நேரம் ஆகிகொண்டிருந்தது.
" மாமா உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா? " என்றான் சிறுவன்
" தெரியாதே" என்றேன்
" அப்பாகிட்டக்க கேளுங்க நல்லா கத்து தருவாரு " என்றான்
ஜானகிராமன் Driving school வைத்திருக்கிறான் என்று தெறிந்து கொண்டேன்.
ஜானகிராமன் தன் பலத்தை முதலீடு செய்து வெற்றி கண்டுவிட்டான். எல்லோரும் அவனுடைய பலவீனத்தைத்தான் சிறு வயதில் பார்த்து பரிகாசித்தோம்.
" சரி நான் இன்னொரு நாளைக்கி வற்றேன் , அப்பா வந்தா ராம்ஜி மாமா வந்தான்னு சொல்லு " என்று கூறி எழுந்தேன்.
அப்போதுதான் அவன் புத்தக மூட்டையில் அதை பார்த்தேன் .....
VR என்று பிளேடு ஆல் செதுக்கப்பட்ட மர scale ......
ஜானகிராமனை பார்த்த மகிழ்ச்சியில் வீடு போய் சேர்ந்தேன் .
Comments
Post a Comment