அறியாத வயதில் செய்த ஒரு நல்ல காரியம்
அறியாத வயதில் செய்த ஒரு நல்ல காரியம்
மகாதான தெருவில் ஒரு ஏழ்மையான குடும்பம் சத்தரத்திர்க்கு எதிரில் இருந்தது. ஒரு பாட்டி, ஒரு அம்மையார், இரண்டு பெண்கள். முதல் பெண் சில நாளில் எங்கோ ஓடிவிட்டது. இரண்டாவது பெண் கால் கை விளங்கா பேசமுடியாத மனநிலை பாதிக்க பட்ட பெண். முதல் பெண் வீட்டை விட்டு போனதிலிருந்து அந்த குடும்பம் மிகவும் கஷ்ட பட்டது. ஒரு நேரத்தில் அந்த பாட்டியும், அம்மையாரும் என்ன ஆனார்கள் என்று தெரிய வில்லை, மனநிலை பாதிக்க பட்ட பெண் மட்டும் தெருவில் கிடந்தது.
இறக்கம் உடையவர்கள் உணவை தட்டில் போட்டனர். மிக மிக கொடுமையாக இருந்தது. அந்த காட்சி இப்போதும் மனதில் ஓடுகின்றது.
அவள் எழுப்பும் குரல் இன்றும் ஒலிக்கின்றது.பசியால் வாடும்.கற்களால் தன்னை தானே அடித்துக்கொள்ளும். தலையை தரையில் மோதிக்கொள்ளும். நான் கடவுளாக இருந்திருந்தால் அந்த பெண்ணிற்கு பிறவா வரம் தந்திருப்பேன் காசியில் வாழும் அகோறிகள் போல்.
ஒருநாள் மதியம் அந்த பெண் பெரிய வாய்க்கால் எதிரில் இறந்து கிடந்தாள். இரு சிலர் எட்டி எட்டி பார்த்து "ஐயோ பாவம் " என்று உச் கொட்டி சென்றனர். சிலர் ஒதுங்கி சென்றனர். வாகனங்கள் தயங்கி தயங்கி சென்றன. ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாத சூழல். துர்நாற்றம் வேறு அடிக்க ஆரம்பித்தது.
அப்போது 15 வயது மதிக்க தக்க சுமார் 5 பையன்கள் அங்கே கூடினார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். அந்த பையன்கள் செய்யும் விஷமங்கள் அளவிடமுடியாமல் இருந்தது. என்ன செய்வது? விளையாட்டாக பேச ஆரம்பித்தார்கள்.
"டேய் பைத்தியம் புட்டுகிசுடா ."
"என்ன கோவிந்தா கொள்ளி போட்டுடுவோமா?"
என்று பேசிக்கொண்டே ..
ஒருவன் அதே தெருவில் இருந்த பாலூர் சாஸ்திரிகள் என்பவர் வீட்டின் கொல்லையிலிருந்து மூங்கிலும், தென்னமட்டையும் கொண்டுவந்தான்.
ஒருவன் அதனை வெட்டி பாடை செய்தான். ஒருவன் கீற்றை முடைந்து
அதன்மேல் வைத்தான்.
(பாடை கட்டவும் , ஓலை முடயவும் பையன்களை தயார் செய்த பெருமை காலஞ்சென்ற நாச்சாமி ஐயரையே சேரும் )
அப்போது அங்கே வந்த மணி சாஸ்திரிகளிடம் கூறினர்.
"டேய் இத ஏகதேசமா செய்யக்கூடாது ஒருத்தன் போய் எல்லார் வீட்லயும் காசு கலக்ட் பண்ணுங்க மீதியை எல்லாம் நான் பாத்துகறேன் " என்றார்.
என்ன அதிக பட்சமாக மூணு ரூபாயோ நாலு ரூபாயோ சேர்ந்தது.
மணி சாஸ்திரிகள் வஸ்திரம் பானை எல்லாம் வாங்கி அனுப்பினார்.பின்னர் இந்த பையன்களே தூக்கினார்கள் சுடுகாட்டிற்கு கொண்டு போனார்கள் மணி சாஸ்திரிகள் அனுப்பி வைத்த கருப்புகிட்டு சாஸ்திரிகள் நாச்சாமி ஐயர் , நாராயணன் போன்றோர் புடைசூழ அந்த பெண்ணின் ஈமகிரியைகள் ஜாம் ஜாம் என்று நடந்தது.
அந்த பையன்கள் வேறு யாருமில்லை .. கணேசன் சார் பையன் ஸ்ரீதர், வாஞ்சிசார் பையன் ரமேஷ், கண்ணன் சார் பையன் பாஸ்கர், மணலூர் ஸ்ரீனிவாச ராகவன், சேகர் வாஜபேயர் காசு கலக்ட் செய்ய சென்று சாட்சியாக இருந்த ராம்ஜி ..
மாலையில் ஸ்ரீதர் குளித்து விட்டு வேக வேகமாக சைக்கிளில் கடைதெரு பக்கம் போனான்.
"எங்கடா போற வேகமா ..? "என்றேன்
"பெரியகோயில் போய் மோட்ச தீபம் எத்தபோறேன் .."
Comments
Post a Comment