Blessings of Maha periyava -I

காஞ்சி மஹாஸ்வாமியின் மகிமை.
அப்போது நான் கல்லூரியை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமையம். என் மூத்த சகோதரன் சந்திரா ஸ்ரீ மஹா பெரியவாளிடம் இருந்தான். அவனும் என்னை வேலை கிடைக்கும் வரை ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்ய சொல்லி அங்கேயே இருக்க சொன்னான். இதற்காக மஹா பெரியவளிடமும் அனுமதி வாங்கினான். சுமார் ஒரு வருட காலம் அங்கே தங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் சில அனுபவங்களை உங்களிடம் கூறலாம் என்று ஆசை படுகின்றேன்.
அந்த கால கட்டத்தில் எனது வேலை என்ன வென்றால், ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு மிர்த்யு பொடி என்று ஒன்று உண்டு . அது கட்டியாக இருக்கும் அதனை உடைத்து சலித்து ஒரு டப்பாவில் போட்டு தரவேண்டும். பின்னர் அலுவலகத்தில் அமர்ந்து பௌர்ணமி பிரசாதங்களை பணம் கட்டியவர்களுக்கு கவரில் அனுப்பவேண்டும்.
கூட்டம் அதிகமாக இருக்கும் போது அதனை கட்டுபடுத்த வேண்டும்.
இரவில் பெரியவர் படுக்கும் அறையின் வாசலில் ஒரு துண்டை போட்டு முழங்கையில் தலையை வைத்து தூங்கவேண்டும். எனக்கு ஒரு அறையில் படுக்க இடம் கிடைத்தாலும் , அதிகாலையில் பெரியவளை பார்த்துவிட்டு எழும் பாக்கியம் கிடைக்கும் என்பதால் பெரியவரின் அறையின் வாசலிலேயே படுப்பேன்.
சந்தர்பனையில் போடும் சாப்பாடை சாப்பிடுவேன். மிக மிக அருமையாக இருக்கும்.
எனக்கு அப்போதெல்லாம் மாதத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது வயிற்று வலியால் திண்டாடுவேன். திருவிடைமருதூரில் இருந்தவரை சுந்தரம் டாக்டர் கொடுக்கும் ரோஸ் கலர் மிக்சரில் குணமானது. இருந்தாலும் விடாமல் தொடர்ந்தது.
ஒரு முறை திருவிடைமருதூரில் வந்தபோது இரவெல்லாம் துடித்தேன் . என் அம்மாவும் வெளியூர் போயிருந்தார். அதிகாலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். கூட்டத்தில் ஒருவர் துண்டை வாயில் வைத்து மூடியபடி " மாமிக்கு தகவல் சொல்லியாச்சா?" என்று கேட்டது எனக்கு என்மேலேயே பயம் வந்தது.
காஞ்சிபுரத்தில் இருந்தபோது சந்திராவும் சென்னை போயிருந்தான். எனக்கு இரவு வயிற்று வலி வந்து திண்டாடினேன். இரவெல்லாம் ஒரே வாந்தி. பெரியவர் இருமும் குரல் வேறு கேட்டுக்கொண்டே இருந்தது.
அதிகாலையில் பெரியவரின் உதவியாளர் பாலு அண்ணா வந்து எட்டி பார்த்து "என்னடா அம்பி என்ன ஆச்சு ?" என்றார். சொன்னேன்.
உடனேயே குதிரைவண்டி காரனை கூப்பிட்டு என்னை அதில் ஏற்றி பெரியவரின் டாக்டர் திரு சுப்ரமணியனிடம் அனுப்பினார். அங்கு போய் ஒரு ஊசி போட்டுக்கொண்டேன். பின்னர் திரும்பி வந்து விட்டேன்.வலி குறைந்து பின்னர் நின்றது.
மாலை பெரியவர் என்னை கூப்பிட்டு அனுப்பினார்.
சந்திராவையும் கூப்பிட்டார்.
"உன் தம்பிக்கு என்ன வயத்த வலியாமே ? அடிக்கடி வருமா ?ராத்திரி எல்லாம் திண்டடினானமே ?" என்றார்
சந்திராவும் எடுத்து சொன்னான்.
சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
"இவன் ஊர்லேந்து வந்து எவ்ளோ நாள் ஆச்சு ?" என்றார்
"நாலு மாசம் இருக்கும் " என்றான் சந்திரா
"அவன் போய் அவன் அம்மா கையால சாப்பிடட்டும் , வேப்பத்தூர் ரவி இன்னைக்கு ஊருக்கு போறனா ? அவன அப்பறம் போகலாம்நு சொல்லு . அந்த டிக்கெட்டுல இவன ஊருக்கு போக சொல்லு . அப்படி போகலாமா ? கொஞ்சநாள் அங்க இருந்துட்டு அப்புறமா திரும்பி இங்கயே வரசொல்லு "
இரவு செங்கோட்டை பேசன்ஜரில் திருவிடைமருதூர் வந்து சேர்ந்தேன்.
இன்று வரை அந்த வலி வரவே இல்லை.
இன்று நான் சாப்பிடும் ஒவ்வொரு பெருக்கையும் அவர் போட்டது.
எனக்கு ஒரு பெரும் வாய்ப்பை ஏற்படித்துக் கொடுத்த சந்திராவையும் என் வாழ்நாளில் மறக்க கூடாது.மறக்கவும் முடியாது பசி என்று ஒன்று வருமே !! நிச்சயம் அப்போது இவர்கள் என் கண் முன்னே நிற்பார்கள்.
இன்னம் நிறைய உள்ளது நேரம் கிடைக்கும் போது கூறுகின்றேன்.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு