Short story
சமீபத்தில் ஒருநாள் திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை கேட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மிகவும் களைப்பாக இருந்ததால் சரி ஆட்டோவில் சென்று விடலாம் என்று காத்திருந்தேன்.
ஆட்டோ வந்தது
"ஏம்பா.. சித்திரகுளம் வரையா ?"
" போலாம் சார் ."
"எவ்வளவு கேக்கற ?"
" என்ன வேனா குடு சார் .."
அவன் அவ்வாறு கூறியதும் எனக்கு சிரிப்பு வந்தது.
"என்ன சார் சிரிக்கரிங்க ?" என்றான்
அமர்ந்தேன்
"ஒன்னும் இல்லப்பா நீ கேட்டதும் எனக்கு ஒரு கதை ஞாபகம் வந்தது என் வீடு போய் சேர இன்னம் 15 நிமிஷம் ஆகும் .. இந்த கதையோட மகத்துவம் என்னன்னா நீ கடவுள் கிட்டக்க வேண்டிகிட்டேன்னா உன்னோட தகுதிக்கு ஏற்பதான் வேண்டிப்ப, ஆனா கடவுள் கிட்டக்க வேண்டிக்கும்போது கடவுளே நீ உந்தகுதிக்கு ஏற்ப என்ன செய்யணுமோ அத செய்ப்பா அப்படின்னு நீ வேண்டினா , கடவுளும் அவரோட தகுதிக்கு ஏற்ப உனக்கு நிறையாவே தருவாரு .. அதுமாதிரி இருந்தது நீ என்கிட்டக்க சொன்னது . " என்றேன் ஆட்டோகாரனிடம்
அவனும் மிக ஆர்வமாக "சொல்லு சார் கேக்கறேன் " என்று கூறி விட்டு அவன் கேட்டுகொண்டிருந்த FM ரேடியோ வை ஆப் செய்தான்
ஆட்டோ போய்கொண்டிருந்தது
நான் கதை சொல்ல தொடங்கினேன் ..
"ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் தன்னுடைய வீட்டு ஒரு விசேஷத்துக்கு ஒரு பாடகருடைய கச்சேரிய ஏற்பாடு பண்ணினார்.அந்த பாடகரோ பரம ஏழை.அந்த பாடகருக்கு என்ன சன்மானம் கொடுக்க வேண்டும் என்பதை அந்த பாடகரின் நண்பரிடம் கேட்டு வைத்திருந்தார் பணக்காரர்.
விசேஷத்தில் கச்சேரி மிக அருமையாக இருந்தது. எல்லோரும் பாராட்டினார்கள்.
பணக்காரரும் ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களுடன் இரண்டு கவர்கள் வைத்திருந்தார் . ஒரு கவரில் அந்த பாடகரின் நண்பர் சொன்ன சன்மானதொகையான ரூபாய் இரண்டாயிரமும் இன்னொரு கவரில் தான் கொடுக்க நினைத்த தொகையாக ரூபாய் ஐயாயிரமும் வைத்திருந்தார் .
"பாடகரே இதுல உங்க நண்பர் சொன்ன சன்மான தொகை இந்த கவர்லையும் , இன்னொரு கவர்ல நான் கொடுக்க நினைத்த சன்மான தொகையும் இருக்கு உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கங்க ." என்றார்.
பாடகருக்கோ தர்ம சங்கடமான நிலைமை நண்பர் சொன்ன தொகையை எடுக்க வில்லை என்றால் அந்த நண்பர் தவறாக நினைப்பார் அதே நேரம் வேறு கச்சேரி ஏற்பாடு செய்து தரமாட்டார் பணக்காரர் கொடுக்க நினைத்த கவரை எடுத்து அதில் ஒரு வேளை குறைவாக இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார் ....."
நண்பர்களே இந்த நேரத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது .. நானும் இந்த கதையில் வருவதுபோல் ஒரு கையில் நான் எப்போதும் கொடுக்கும் தொகையான ரூபாய் 20 ம் இன்னொரு கையில் அந்த ஆட்டோக்கரனின் பண்பிற்காக ஒரு ஐந்து ரூபாய் சேர்த்து ரூபாய் 25 ம் மறைத்து வைத்துக்கொண்டு,
"ஆட்டோகாரரே நான் எப்போதும் தற்ற பணம் ஒரு கைல இருக்கு . இன்னொரு கைல நீ எவ்ளோவேனா கொடுன்னு சொன்னதுனால வேற ஒரு தொகையும் வைத்திருக்கேன் . இப்போ அந்த கதைல ஒரு பணக்காரர் வெச்சிருந்தாறே அதுமாதிரு . இந்த நிலைல இப்ப நீ எத தேர்ந்து எடுப்ப..??? " என்று ஒரு பெரிய இக்கட்டில் ஆட்டோக்காரனை மாட்டி விட்ட மகிழ்ச்சியில் இருந்தேன்.
ஆட்டோ காரனும் ஆட்டோவை ஒரு ஓரம் நிறுத்திவிட்டு யோசனை செய்தான். அவன் திண்டாடுவதை பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
அவன் கூறினான் ..
" அய்யா நீங்க ரொம்ப புத்தி சாலி. நல்ல பேச்சு திறமை இருக்கு அதே நேரம் நீங்க கடவுள் மாதிரி .. ஏன்னா நீங்கதான் சொன்னேங்க கடவுளா கொடுத்தா நாம கேக்க நினைச்சதை விட அதிகம்தான் கொடுப்பாருன்னு அதுனால .."
சரி அவன் நான் அதிகமாக கொடுக்க நினைத்த 25 ரூபாய் வைத்திருந்த கையை தான் தெரிந்து எடுப்பான் என்று ஆவலுடன் காத்திருந்தேன் ..
" .. அதுனால கடவுள் ஒரு கையாள அருள் கொடுத்தாலே அதிகமா இருக்கும் நீங்களோ ரெண்டு கையிலயும் அருள் கொடுக்கறேங்க உங்க தகுதிக்கு ரெண்டயுமே தரலாம்.." என்று கூறி
என் அனுமதி கேக்காமலேயே இரண்டு கையிலிருந்த மொத்தம் 45 ரூபாயும் எடுத்துக்கொண்டு ஆட்டோ வை ஸ்டார்ட் செய்தான்.
" வர்றேன் சாமி .."
ஆட்டோவின் கரும் புகை என் முகத்தில் அடித்தது.
--
Comments
Post a Comment