தீராத விளையாட்டுப் பிள்ளை
எனக்கு நீண்டநாட்களாக ஒரு சந்தேகம். இந்த, தெருவில் விளையாடும் ஆட்டங்களை யார் கண்டுபிடித்தார்கள்? அதற்கான Rules யார் frame செய்தது? இந்த இந்த காலங்களில் தான் இந்த விளையாட்டுகளை விளையாடவேண்டும் என்றும், எப்படி அவை சரியாக அந்த அந்த காலங்களில் ஆரம்பிக்கின்றன என்றும் எனக்கு பெரும் ஆச்சர்யம் உண்டு.
மகாதான தெருவில் பெரும்பாலும் மொட்டையர் குடும்பம்தான் விளையாட்டுகளை ஆரம்பித்து வைப்பார்கள்.
சேக்கா என்கிற சேகர் அவன் அண்ணன் சாம்பு ( சாம்பு எங்களை விட சுமார் 10 வயது பெரியவன் )
என்னை பொறுத்தவரை விளையாட்டுகளை வேடிக்கை பார்பதோடு சரி. பெரும்பாலும் சேர்க்க மாட்டார்கள் அப்படியே விளையாட சென்றால் ரகு சைடு கட்டாது என்று எதிர் அணியிடம் வாதிடுவான். அதனால் கூடுதலாக இன்னொருவன் அவன் சைடு க்கு கிடைப்பான். இன்னம் சொல்லப்போனால் ஒப்புக்கு சேர்த்துக் கொள்வார்கள். (என்னமோ சேர்த்துக்க்கொண்டார்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்வேன் )
பம்பரம்
நான் முன்பே கூறியது போல் சேக்கா வீட்டில் தான் season துவங்கும். மாலையில் பள்ளி விட்டவுடன் மொட்டையர் கடை வாசல் களை கட்டதுவங்கும். ரெடி ஒன் டூ த்ரீ என்றவுடன் எல்லோரும் பம்பரத்தை சுற்றி அபீட் செய்யவேண்டும். எனக்கு அதில் இழுப்பு மட்டும்தான் வரும். ரகு, சேக்கா ,சாம்பு, அய்யப்பு எல்லோரும் சாட்டை விடுவார்கள் . அதிலும் பம்பரத்தை கீழே விடாமல் அப்டியே catch செய்து ஐ பஸ்ட் என்பார்கள். கடைசியில் கேட்ச் செய்பவன் பம்பரத்தை வட்டத்துக்குள் வைக்கவேண்டும் . ஆளாளுக்கு அக்கு வைப்பார்கள். அக்கு என்றல் அவர்கள் பம்பரத்தால் என் பம்பரத்தை குத்துவார்கள். அப்படி குத்தி குத்தி என்பம்பரம் முழுக்க அம்மை வார்த்த முகம் போல் இருந்தது.
ஒருமுறை சாம்பு என்பம்பரதிலிருந்து நரசிம்ஹரை வரவழைப்பதாக கூறினான். நான் என்பம்பரத்தை வட்டத்திற்குள் வைக்க அவன் விட்ட சாட்டையில் அவன் பம்பரம் என்பம்பரத்தை பதம் பார்த்து. அப்படியே தூண் பிளப்பதுபோல் பம்பரம் இரண்டாக பிளக்க "என்ன நரசிம்ஹர் வந்தாரா? " என்று நக்கல் அடித்தான். அப்புறம் சேக்கா அதை ஒரு பேப்பரில் கட்டி postmoderm ஆன body போல் தந்தான். அதனை வாங்கிக்கொண்டு அழுதுகொண்டே சென்றேன்.
பெயர் தெரியாத விளையாட்டு
ஒருவர் ஒரு குச்சியை தலையின் மேல் இரு கைகளால் பிடித்திருக்க பின்னாலிருந்து அவர்கள் குச்சியால் தட்டிவிடுவார்கள். அதனை தட்டிக்கொண்டே போவர்கள். நாம் அவர்களை துரத்திகொண்டே போய் பிடிக்க வேண்டும். நாம் பிடிக்கும் போது அவர்கள் கல்லையோ காய்ந்த மரத்தையோ தொட்டுவிட்டால் அவர்கள் அவுட் கிடையாது.
ஒரு முறை சேக்காவை துரத்தினேன் அவன் அய்யப்பு வீட்டு பஞ்சுமரத்தை தொட்டுவிட நான் அவுட் என்றேன் அவன் இல்லை என்றான். அப்பீல் சாம்புவிடம் போக அவனும் action replay போல் செய்து காட்ட சொல்ல கடைசியில் அவுட் என்று சொல்லிவிட்டான். அதற்கு அவன் சொன்ன காரணம் காய்ந்த மரம் என்றுதான் சொல்லி இருக்கிறதே தவிர பச்சை மரத்தை பற்றி சட்டத்தில் கிடையாது என்றும் முன்பு ஒருமுறை கோபு (கோபு எல்லோரையும் விட சுமார் 15 வயது பெரியவன்-சாம்புவின் அண்ணா ) இதே போன்று தீர்ப்பு வழங்கி உள்ளத்தையும் சுட்டிக்காட்டினான்.
சேக்காவின் கோபுவிடம் மேற்கொண்ட மேல்முறையீடும் தோற்றுவிட என்னை மறுநாள் முதல் விளையாட வரவேண்டாம் என்றான்.
பின்னர் ஒருமுறை கிட்டிபில்லில் என்னை சத்தரத்திலிருந்து நொண்டி அடிக்க சொன்னான் பஜனை மடம் வரை. ( ஆனால் மூன்று முறை மூச்சு விடவும் கால் ஊனிக்கொள்ளவும் அவகாசம் கொடுத்தார்கள் ) என் பின்னாலயே எல்லோரும் "நொண்டி நொண்டி நொடிசிக்கோ " என்று கோரசாக பாடிவந்தார்கள் மார்கழி மாத பஜனை போல்.
மகாதானதெருவின் வடக்கு பகுதியில் விஜி கிரிக்கெட் போன்ற வித்யாசமான விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தான்.
"என்ன ராம்ஜி கிரிக்கெட் வறயா ? cover ball மேட்ச் "என்றான் . அதுவரை நான் பக்கத்துக்கு வீட்டு மாலியுடன் துணியால் சுற்றப்பட்ட பந்தோ அல்லது அவர்கள் வீட்டு வாசலில் காய்க்கும் நார்த்தங்காயை வைத்தோ தான் விளையாடி வந்தேன் . எனக்கு விஜி சொல்லும் cover ball, tennis ball மற்றும் கார்க்கு பால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கார்க்கு பாலில் பயம் இருந்தது. கூடியவரையில் நான் விஜி சைடு லேயே விளையாடிவிடுவேன். இல்லை என்றால் அவன் லில்லி தாம்சன் என்று சொல்லி வேகமாக போடும் பந்தை என்னால் எதிர் கொள்ள முடியாது. என்னை முக்கால் வாசி விஜியும் - ஸ்டம்புடு என்ற பெயரில் சங்கரும் அவுட் ஆக்கிவிடுவார்கள்.
"HOWZZZZZZAT?????" என்று என்முகத்துஅருகில் tight closup ல் வந்து கத்துவான் எனக்கு ஒரே பயமாக இருக்கும். அம்பயராக இருக்கும் ரமேஷும் (ரங்கநாத ஜோசியர் பையன்) விஜி கத்திவிட்டான் என்றால் கோவர்தன கிரியை தாங்கி நிற்கும் கண்ணன் போல் கையை தூக்கிவிடுவான்.
TVR பையன் கண்ணன் கிரிக்கெட் பற்றி நிறைய data தருவான். சிறு வயதிலேயே அதிகஅளவு புத்திசாலித்தனம் இருந்தது.
"வேப்பதூருடன் மேட்ச் ' என்று விஜி கூறியதும். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். " Sunday match எல்லாரும் டெய்லி practice செய்யணும் " என்று டீம் announce செய்தான். என்னை 12th man என்றான். துள்ளி குதித்தேன். அப்புறம்தான் ஜானகிராமன் சொன்னான் வேப்பத்தூர் டீம்க்கு அவன்தான் 12th man என்றும் ரொம்ப துள்ள வேண்டம் என்றான்.
"ஆமா ஜனகிரமா 12th man அப்படின்னா என்ன செய்யணும் bowling, batting, wicket keeping இதுல என்ன செய்யணும் " என்றேன்
"அது ஒன்னும் இல்ல அப்பப்ப players கேக்கறப்ப தண்ணி கொடுக்கணும். Ball boundry லைன் தாண்டி போய்டா பொறுக்கிண்டு வரணும் " என்று guidelines கொடுத்தான்.
விளையாட்டு நாள் அன்று பாஸ்கர் (கண்ணன் சார் பையன்) வேண்டும் என்றே அடிக்கடி தண்ணீர் கொண்டு வரசொன்னான்.
வேப்பத்தூர் சைடு ல் அம்பி, ராதா, கட்டசுச்சு, ராஜா என்று எல்லோரும் இருந்தும் அவர்கள் 13 ல் தோற்க விஜி அம்பியை தோற்று விட்டோம் என்று எழுதி தரசொன்னான். மற்றவர்கள் எல்லோரும் தோற்கிறோம் என்றவுடன் பௌண்டரி லயனிலிருந்து அப்படி அப்படியே போய் விட்டார்கள்.
அம்பியும் அவனுடைய ஜியாகரபி நோட்டின் ஒரு பேப்பரை கிழித்து சிரித்துக்கொண்டே எழுதி தர எல்லோரும் கோஷம் போட்டபடியே வந்தோம் .
"அடுத்தவாரம் திருநாகேஸ்வரதுடன் மேட்ச் "என்றான் விஜி. " நான் உண்டா ?"என்று கேட்டேன்.
"இதே டீம் " என்றான் விஜி .
பின்னர் பாஸ்கர் சொன்னான் அதுலேயும் நீதான் 12th man என்றான்.
நான் கிரிகேட்க்கு முழுக்கு போட்டுவிட்டு மாலியுடன் நார்த்தங்காய் ball மேட்ச் ஆட போய்விட்டேன்.
Comments
Post a Comment