சிகை அலங்காரம்
மகாதான தெருவிற்கு மூன்று சிகை அலங்காரம் செய்பவர்கள் தினமும் வருவார்கள். கிருஷ்ணன், சோமு, நடேசன். இதில் கிருஷ்ணன் சில குறிபிட்ட நபர்களுக்கு மட்டுமே செய்வார். மிகவும் சுத்தமாகவும் வெள்ளை உடையிலும் வருவார். ஒரு முக்யமான செய்தி கிருஷ்ணனின் பையன் அப்போதே அமரிக்காவில் இருந்தான்.நடேசன் பொதுவாக எல்லோருக்கும் செய்து விடுவார். சோமு வயதான கணவனை இழந்தவர்களுக்கு மட்டும் தலைமுடி மழித்து விடுவார்.
எனக்கு கிருஷ்ணனிடம் செய்து கொள்ள ஆசைபடுவேன் ஆனால் ஒரு முறை கூட சந்தர்பம் கூடி வந்ததில்லை.
என் பெரியப்பா முடி வெட்டும்போது அருகிலேயே அமர்ந்து
"நடேசா நல்ல ஓட்ட வெட்டிடு. இவனுக்கு பத்துநாளைக்கு ஒருவாட்டி ஜலதோஷம் பிடிக்கறது நல்ல மிலிடரி கட் பண்ணிடு. அடுத்த ஆறு மாசத்துக்கு பிரச்னையே இருக்கக்கூடாது."
மீறி நான் தகராறு செய்தால் அடுத்தமுறை சோமுவிடம் சொல்லி வெட்ட சொல்லுவதாக மிரட்டுவார்.
"தம்பி ஏன் முரண்டு பிடிக்கறிங்க இன்னம் ரெண்டு வருஷம் கழிச்சி பாருங்க இதுதான் பேஷன் ஆக இருக்கும் ".
"யோவ் இன்னைக்கி கதைய பாருய்யா ." என்று மனதுக்குள்ளேயே திட்டுவேன் .
வரும் நபரும் ஆசை ஆசையாக படு சுத்தமாக வெட்டிவிடுவார்.
அப்டியே டியுசன் போனாலும் எல்லோரும் கேலி செய்வார்கள்.
"என்னடா எந்த கரையான் பொந்துல தலைய விட்ட?".
தலையில் ஓங்கி குட்டுவார்கள்.
ஆனால் இந்த வெங்குட்டு மட்டும் எப்டியோ கும்பகோணம் போய் ஸ்டெப் கட் செய்து கொண்டு வருவான். ரொம்ப அழகாக இருக்கும். எல்லோரும் அவனையே பார்ப்பதுபோல் இருக்கும். சற்றே பொறாமையாக இருக்கும். அவனும் அந்த தலை முடியை ஸ்டைல் ஆக இடது கையால் கோதி விடுவான்.
"35 ரூபா உனக்கு வசதி எப்படி ?".
எனக்கு கோபமாக இருக்கும். அதற்கென்று ப்ரேத்யோகமாக ஒரு சீப்பு வைத்திருந்தான். அடிக்கடி அதனால்சீவுவான். . கும்பகோணத்தில் வாங்கி யதாம். எப்படியாவது இவனைபோல் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைபடுவேன்.
அதேபோல் அப்போது பெல்ஸ் பேன்ட் ரொம்ப பிரபலமாக இருந்தது. 36 இன்ச் அணிந்து வருவான். கும்பகோணத்தில் ஒரு பிரபல டைலரிடம் தைத்தான். சுருங்க சொன்னால் ஒரு trend setter என்றே சொல்லலாம்.
என்னிடம் பேன்ட் கிடையாது.வேஷ்டிதான் . அழுக்கு தெரியாமல் இருக்க தலைப்பை மாற்றி மாற்றி கட்டுவேன். பின்னாளில் என் பெரியம்மா பையன்களின் பழைய பேன்ட் களை ஆல்டர் செய்து போட்டுக்கொண்டேன்..
" உனக்கு வேணும்னா சொல்லு உன்ன கும்பகோணம் அழைசிண்டு போய் வெட்டி விடறேன் ".
வெங்குட்டுவை போல் தலையை ஸ்டெப் கட்டிங் செய்து கொள்ளவோ பெல்ஸ் பேன்ட் . அணிந்து கொள்ளவோ எங்கள் வீட்டில் தடை இருந்தது.
ஒரு முறை சலூன் சென்று முடி வெட்டிக்கொள்ள போனேன்.
"தம்பி ஒக்காருங்க அஞ்சு நிமிட்டுல முடிஞ்சிடும் " என்றார்
தினத்தந்தி பேப்பரை படித்தேன் கன்னித்தீவில் சிந்துபாத் இளவரசியை
தேடி போய்கொண்டிருந்தார் .. தொடரும் போட்டிருந்தது.--
சுவற்றில் மாட்டி இருந்த படங்களை கண்ணாடியில் தெரிந்த பிம்பங்கள் மூலமாக ஓரக்கண்னால் பார்த்து ரசித்தேன்.
என் முறை வரும்போது "தம்பி வாறிங்களா ?".
முகத்தில் தண்ணீர் தெளித்து "எப்படி வெட்டனும் ?".
என்றார்.
மகிழ்ச்சியுடன் "கமல் மாதிரி ஸ்டெப் கட் செஞ்சிவிடுங்க " என்றேன் .
அது என்ன விந்தையோ தெரியவில்லை தலையில் கை வைத்தவுடன் தூக்கம் வருகிறது .
கண்ணை மூடி கமல் போல் என்னடி மீனாட்சி பாடினேன் மனதிற்குள் .
கண் விழித்தபோது கண்ணாடியில் பார்த்தல் சுத்தமாக வெட்டபட்டிருப்பது பார்த்து அழுகையாய் வந்தது. கண்ணாடியை பார்த்தேன் என் பின்னால் என் அண்ணன் சந்திரா உட்கார்ந்திருப்பது தெரிந்தது . விஷயம் புறிந்தது ,
"வேலைய பாற்றா ரவுடி மாதிரி தலைய வெச்சிண்டு .."
நீண்ட நாட்களுக்கு அனுமதி கிடைக்காமல் பின்னர் சுமார் இரண்டு வருடம் கழித்து முடி வளர்க்கவும் பெல்ஸ் பேன்ட் போடவும் அனுமதி கிடைத்தது .
கும்பகோணம் போய் ஒரு டைலரிடம் 36 இன்ச் பெல்ஸ் தைதுக்கொண்டேன் அங்கேயே ஒரு சலூன் சென்றேன். தினத்தந்தி பேப்பர் கிடந்தது கன்னித்தீவு படித்தேன் இப்போதும் சிந்துபாத் இளவரசியை
தேடி போய்கொண்டிருந்தார் .. தொடரும் போட்டிருந்தது.. இந்தமுறை வெளிப்படையாகவே அங்கு மாட்டி இருந்த படங்களை பார்த்தேன் .மூ க்கின் கீழ் அரும்பி இருந்த மீசையை தடவி பார்த்தேன் வெங்குட்டு வெட்டிக்கொள்வதுபோல் வெட்டிக்கொண்டேன் .
19 ஆம் நம்பர் பஸ் ஐ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன் .
குளித்துவிட்டு புது பான்டையும் அணிந்துகொண்டேன் கும்பகோணத்தில் வாங்கி இருந்த சீப்பால் அடிக்கடி சீவிக்கொண்டு நேரே வேங்குட்டுவிடம் காட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு போனேன் .
"வெங்குட்டு ..." கதவை தட்டினேன்
"இது என்னடா கோலம் .." என்றார் வெங்குட்டுவின் அம்மா.
" ஆமாம் மாமி இப்ப இதான் பேஷன் ..உங்களுக்கு தெரியாது ..வெங்குட்டுவ கூப்பிடுங்கோ .."
வெங்குட்டு வந்தான்
" ..."
"என்னடா ....?" அதிர்ச்சியில் உறைந்தேன்.
"ராம்ஜி ஸ்டெப் கட்டிங் இப்ப வேஷன் இல்ல அதான் தலைய ஓட்ட கட் பண்ணிண்டேன் .. நடேசன் கிட்டக்கதான்... ரெண்டே ரூபாதான் . உனக்கு வசதி எப்படி. பான்ட்டும் டைட் தான் . இதான் இப்ப பேஷன் .உனக்கு வேணும்னா சொல்லு உன்ன நடேசன் கிட்டக்க அழைசிண்டு போறேன் "
அடபோங்கடா...........
Feedback to : ramkumar.v2009@gmail.com
23/11/2009
Comments
Post a Comment