அமெரிக்கா
"இதபாருடா ராம்ஜி சசி வற்ற 25 ம் தேதி அமெரிக்கா போறா . அவ ஆபிஸ் ல அனுப்பறா. நம்ம குடும்பத்துல மொதோ மொதோ ஒருத்தி பாரின் போறா நீ ஒரு வாரம் முன்னாடியே வந்து கொஞ்சம் கூடமாட ஒத்தாசை பண்ணு. மெட்ராஸ்ல என்ன தனியாதானே இருக்க கொஞ்சம் உங்க அத்திம்பேருக்கு ஒத்தாசை பண்ணு .யாருக்கும் சொல்ல வேண்டாம் எல்லாரும் கண்ணு போடுவா .." என்று அடுக்கிக்கொண்டே போனாள் என் அக்கா
"இது என்ன ஊர்ல இல்லாத பெரிய விஷயமா ? உங்க அக்கா ஏன் இப்படி பெருசு பண்றா ? ரொம்ப கர்வம் ஜாஸ்தி. அதுஎன்ன யாருகிட்டகையும் சொலாதன்னு ? உங்க கிட்டக்க சொன்னாதான் நீங்க ஊர் முழுக்க டாம் டாம் அடிப்பேள்னு உங்க அக்கா சரியான ஆள பாத்துதான் சொல்லி இருக்கா ..ரொம்ப ஜம்பம் ஜாஸ்தி எங்காதுல கூடத்தான் ஒண்ணு விட்ட மாமா பையன் அமெரிக்கா போனான் ..." என்று என்மனைவி அடுக்கி கொண்டே போனாள்
"ஏன்டா உன் பொண்டாட்டிய ரெண்டு நாள் முன்னாடியே இங்க வரசொல்லு எனக்கு ஒத்தாசைக்கி . அவ வந்தாதான் சசியோட வெளில கடைக்கி போய் அவளுக்கு வேண்டிய சமாசாரங்கள் வாங்கி தரமுடியும். என்னால வீட்ட விட்டு எங்கயும் வெளிய போக முடியாது, கட்டாயம் வரசொல்லு .." என்று என் அக்காவின் அடுத்த S T D கால் .
"ஆமா இவ பொண்ணுக்கு நான் தான் போர்டர் போல இருக்கு . நான் அவகூட வெளில போகணும், லக்கேஜ தூக்கணும் .. ஒரு கூல் ட்ரின்க் கூட வாங்கி தாரமாட்டா ..இதுல நான் போய்ட்டா போதும்
"கோமு உன் சமையலே தனி ருசிடி உங்க அத்திம்பேர் கூட சொல்வார், ராம்ஜி பொண்டாட்டி ரசம் வெச்சா இன்னைக்கி முழுக்க சாபிடலாம் ..அப்படிம்பார்" அப்படின்னு ஐஸ் வெச்சியே சமையல் வேலை முழுக்க என் தலைல கட்டிடுவா.. ஏ அப்பா எங்க ஊர் காராளுக்கு எல்லாம் இந்த சாமர்த்தியம் தெரியாது . .. இதெல்லாம் தஞ்சாவூர் ஜில்லா காராளுக்குதான் வரும் .." எண்ணை இல்லாமலே என் மனைவி பொறிந்தாள்.
"ராம்ஜி இன்னைக்கி நீவரும்போது உலன் சாக்ஸ் வாங்கிண்டு வா அது மவுண்ட் ரோடுல தாகூர் டாசுல தான் இருக்காம் ..காசு நான் தந்துடறேன் .."
"காசு என்னடி காசு என் மருமாளுக்கு இது கூட நான் செய்யக்கூடாதா?.."
"அப்பா சரி ரெண்டு செட்டா வாங்கிண்டு வந்துடு."
400 ரூபாய் பில்லா ஆகும் என்று நான் எதிர் பார்க்க வில்லை .
தினமும் ஒவொரு ஐட்டமாக லிஸ்ட் கூடியது .
"மத்யானம் பல்லவன்ல என் மாமியார் வற்றா நீ போய் எக்மோர்ல கூட்டிண்டு வந்துடு ..திருச்சில மச்சினர் ஏத்தி விட்டுடறார் .."
அக்காவின் மாமியார் இன்னொரு முதியவருடன் வந்து இறங்கினாள்.
" யார் மாமி இது ?"
" சேஷு என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பா பையன் டா. இவன் அந்த நாள்லயே வெளி நாடு போயிருக்கான் .. அதன் நம்ம சசிக்கு ஏதாவது சந்தேகம்னா சொல்லி கொடுப்பான் . எங்க குடும்பத்துல மொதோ மொதோ கப்பல்ல போனாவன் ..இது ராம்ஜி நம்ம வெங்குட்டுவோட மச்சினன் " என்று தன் தம்பியிடம் கூறினாள் .
சேஷு மாமா காதில் விழுந்ததாக தெரிய வில்லை பொத்தம் பொதுவாக தலையை மத்யமாக ஆட்டினார். சட்டையை வேஷ்டியில் இன் பண்ணிக்கொண்டு வேஷ்டிமேல் பெல்ட் போட்டிருந்தார். முகத்தில் ஒருவார சவரம் பாக்கி இருந்தது.
கால் டாக்ஸி பிடித்து வந்து சேர்ந்தோம். டாக்சிக்கு தான் தான் காசு கொடுப்பேன் என்று அடம்பிடித்தாலும் பர்ஸ் பையில் அடியில் மாட்டிக்கொண்டு விட்டதாக கூற நானே பைசா கொடுத்தேன் .
"ராம்ஜிக்கு எப்போதுமே தாராளமான மனசு .." மாமியின் ஆசிர்வாதம் கிடைத்தது அதே நேரம் என் மனைவியின் முகமும் ஸ்லைட் ஷோ வாக ("அதான் இளிச்ச வாயன்னு எழுதி ஒட்டி இருக்கே....." ) வந்து மறைந்தது
"ஏண்டி இது என்னடி உன் மாமியார் இப்ப போய் ஒரு புது கேரக்டர உன் மாமியார் introduce பண்றா ..? இந்த மாமா இவ்ளோ நாள் எங்க போயிருந்தார் ?"
"மாமியாருக்கு கோபம் வரும்போது எல்லாம் ' நான் போறேன் சேஷுவாத்துக்குன்னு ..' சொல்லுவா பழுவூர்ல இருக்கார். திருச்சில பாத்துட்டு அழைசிண்டு வந்திருக்கார். அவர் அந்த நாள்லயே பாரின் போயிருக்கார்னு மாமியார் சொல்லுவார் இப்ப சசிக்கு டிப்ஸ் கொடுக்க வந்திருக்கார் .."
" ஏன் மாமா நீங்க அந்த நாள்ள எந்த கன்ட்ரிக்கு போனேள் ..?" என்றேன் சற்றே சப்தமாக
"அந்தமான் ." என்றார்
"ஏண்டி அந்தமான் இந்தியவுலன்ன இருக்கு உன் மாமியார் பாரின் னா?" என்றேன் மெதுவாக .
"அவாளுக்கு கடல் தாண்டினாலே பாரிந்தான் கண்டுக்காத .."
சேஷு மாமா பெரிய பையில் தன் துணிகளை வைத்திருந்தார்.
" மாமா பைய பாத்தா ஒரு வருஷம் இங்கயே தங்குவார்னு நினைக்கறேன் " என்றேன் .
"இல்ல பக்கத்துல இருக்கற மாங்காடு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி இதெல்லாம் பாக்கணும் .." என்று அடுக்கிகொண்டே போனார்.
"அப்ப சரி ..நீ எதுக்கும் இவர் பேர ரேஷன் கார்ட்ல சேத்துடு . இவர் இப்போதைக்கி இங்கேந்து போறதா தெரியல்ல ." என்றேன் என் அக்காவிடம்.
'சேஷு சசிக்கு ஏரோப்ளேன் ல எப்படி போகணும்னு சொல்லிக்கொடு . அவளுக்கு தெரியாது " என்றாள் அக்காவின் மாமியார்.
"நான் கப்பல்ல போனேன் ... ஒருவாரம் ஆச்சு .. காத்து ஒதுக்கல்ல ..ஒரே வாந்தி. நான் சப்தம் போடாம ஜன்னல் ஓரமா ஒக்காந்துண்டேன் .. வாந்தி எடுக்க சௌகர்யம் பாரு .."
"சரிதான் மாமா .. அப்ப சசி நீயும் பிளைட்ல ஜன்னல் ஓரமா ஒக்காந்துக்கோ ..வாந்தி வந்தா எடுக்க சௌகர்யம் ..வேற என்ன அட்வைஸ் தரபோறேள் மாமா .." என்றேன்
" .. அப்புறம் ஒரு வாரம் டிராவல்நால என்னோட வயறு கெட்டு போச்சு.. தண்ணியோ ரேஷன் ... அதுக்கு என்ன பண்ணினேன்னா .." என்று மாமா தொடர்ந்தார் ..நான் அவசரம் அவசரமாக
" மாமா போதும் ரெஸ்ட் எடுதுகங்கோ .. நாளைக்கி அட்வைஸ் தரலாம் .." என்று தற்காலிகமாக நிறுத்தினேன் .
சசியின் ஆபிஸ் நண்பர்கள் அவளுக்கு செக் லிஸ்ட் அனுப்பி இருந்தார்கள் .அதில் என்ன என்ன எடுத்து போகவேண்டும் என்று பக்கவாக இருந்தது . இது அவர்கள் ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்வதாம் , புதிதாக போபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவர்கள் தங்கள் பங்குக்கு விடுபட்டு போனதை சேர்த்துக்கொள்வார்கள் .. இது இப்படியே தொடரும் . இந்த கான்செப்ட் நன்றாக இருந்தது.
என் மனைவி சரியாக 25 ம் தேதி காலை வந்து சேர்ந்தாள்.
என் அக்கா சமையலுக்கு ஆள் ஏற்பாடு செய்திருந்தாள். என் மனைவியும் என் அக்காவும் ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டார்கள்.
"ரொம்ப சந்தோசம் அக்கா நம்ம சசி அமெரிக்கா போராளாமே? நீங்க எவ்ளோவு கொடுத்து வெச்சிருக்கணும் . உங்க தங்க மான மனசுக்கு ஏத்தமாதிரி எல்லாம் நடக்கறது..." என்று என் மனைவி அடுக்கிகொண்டே போக .நான் விக்கித்து பார்த்தேன் .சமயலறையில் ஆள் போட்டதை பார்த்ததும் இன்னம் பாராட்டு அதிகமாகியது. தனக்கு லீவு கிடைக்க வில்லை என்றும் ஆடிட் சமயம் என்றும் ரொம்பவும் வருத்த பட்டு கூறினாள்.
" மாமி பால் வேணும் கொஞ்சம்தான் இருக்கு " என்று சமையல் மாமி ஸ்டாக் பொசிஷன் கூறினாள்.
"நாலு லிட்டர் கொடுத்தேனே ..?"
"ஒரு அடுப்புல காப்பி போட்டுண்டே இருக்கேன் வர்றவாளுக்கு கொடுக்க . உங்க அதுக்காரர் காலம்பரலேந்து கால் டோஸ் அறை டோஸ்னு எட்டு வாட்டி சாப்டுட்டார் " என்று போட்டு கொடுத்தாள்.
"ஏண்டி சசி ஊருக்கு போற செலவ விட காபி செலவு ஜாஸ்தி ஆயிடும் போல இருக்கே உங்காத்துல .. " என்றேன்.
ஒரு அடுப்பு வள்ளலார் ஏற்றி வைத்த நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது எப்போதும்.
ஏகப்பட்ட நண்பர்கள் , உறவினர்கள் வந்து போனார்கள்.ஆளாளுக்கு அட்வைஸ் கொடுத்தார்கள்.அத்திம்பேர் எப்போதும் மொபைலில் பிசியாக இருந்தார்.
"மிஸ்டர் வெங்கட் கத்தார் ஏர்வேஸ் நல்லாத்தான் இருக்கும்.நீங்க என்ன பண்ணுங்க போர்டிங் பாஸ் வாங்கறதுக்கு முன்னாடியே ஆன்லைன்ல உங்க சீட் நம்பர நீங்களே செலக்ட் செஞ்சிக்கலாம் .."
"US ல எந்த இடம் போற?"
"வாஷின்டன் பக்கத்துல டென்னிசி "
"கத்தார் ஏர்வேஸ் டைரக்ட் பிளைட் கிடையாது வாஷின்டன்ல மாறனும் கனைக்டிங் பிளைட் அவனோட ரெஸ்பாண்சிபிலிட்டி ."
"They will take care of luggage. You dont have to worry at all"
"கிரான்ட் ஸ்வீட்ஸ்ல ரெடிமிக்ஸ் வேண்டியது கிடைக்கும் வாங்கி வெச்சிகங்க."
"நீங்க ஏர்போர்ட் போனவுடனே காலிங் கார்ட் வாங்கி போட்டுகிடுங்க சசி ."
"Raju will pick you up at Tennisi. You dont have to worry atall. We have made all the arrangements.Couple of weeks you can stay in hotel. After that Raju will help you in getting a Flat. Then you can find a room mate.."
அக்காவின் மாமியார் தன் பங்கிற்கு பருப்பு பொடி , ரசபொடி என்று ஏகத்திற்கும் செய்து கொண்டு வந்து எடுத்து போக சொன்னாள். சசி அதனை categorically reject செய்தாள்.
"என்னம்மா இது பாட்டி லூசு மாதிரி இதெல்லாம் கொடுக்கறா ..? ஏர்போர்ட்லயே இதெல்லாம் தூக்கி போட்டுடுவான் ." என்று ஆற்க்யு செய்தாள் .மாமி எல்லோரிடமும் சொல்லி சொல்லி அதாங்க பட்டாள்.
சேஷு மாமா world map வைத்துகொண்டு டென்னிசி இந்தியாவிற்கு வடக்கா தெற்க்கா என்று பார்த்துகொண்டிருந்தார்.
" ஏன் கேக்கறேள் வடக்கா தெக்கான்னு" என்றேன்
" இல்ல செவ்வா புதன் வடக்கே சூலம் .."
அத்திம்பேர் மீண்டும் மீண்டும் செக் லிஸ்டை சரிபார்துகொண்டிருந்தார் .
அக்காவின் மாமியார் சசிக்கு நெற்றி முழுக்க கலர் கலராக குங்குமம் வைத்து விட்டாள் .
எல்லோரும் ஏர்போர்ட் போனோம் .அறுபது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி உள்ளே போனோம்.உட்கார இடம் இல்லை. சுமார் மூன்று மணி நேரம் நின்றோம் . என் மனைவி என்னை முறைத்ததில் இந்த முறை நியாயம் இருந்தது.
இரண்டு நாளில் போய் சேர்ந்ததை பற்றி செய்தி வந்தது .
மீண்டும் ஒரு போன் வந்தது "அம்மா கிரான்ட் ஸ்வீட்ஸ் ல வாங்கின ரெடி மிக்ஸ்லாம் எங்கயோ மிஸ் ஆயிடுத்து கானம்ம்மா " என்றாள் சசி
மீண்டும் ஒரு போன்
"அம்மா பாட்டிகொடுத்த பருப்புபொடி மட்டும் இருக்கும்மா நல்ல வேளை. ஆனா இது எப்படி வந்ததுன்னே தெரியல்ல " என்றால் சசி
"தக்காளி தொக்கு பிரமாதம்டி " என்று குரல் கேட்டது . திரும்பி பார்த்தேன் அக்காவின் மாமியார் சாப்பிட்டுகொண்டிருந்தார்
ஊறுகாய் பாட்டிலை எட்டி பார்த்தேன் அதில் போட்டிருந்தது ..........
'Grand Sweets"
Comments
Post a Comment